உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா கோலாகலம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள, சின்ன மேலமையூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. செங்கல்பட்டு, சின்ன மேலமையூர் பிள்ளையார் கோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் திருப்பணிகள் துவங்கி, சில நாட்களுக்கு முன் முடிந்தன. இதையடுத்து, சின்ன மேலமையூரில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி, குருபூஜையுடன் துவங்கி, வேள்வி பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பெருந்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் கோபுர கலசத்திற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டி பூஜை செய்தார். இதில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, அரசு சிறப்பு வழக்கறிஞர் கனகராஜ், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திருமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், செவ்வாடை பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேலு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை