மறைமலை நகர் நகர மன்ற கூட்டம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மறைமலை நகர்:மறைமலை நகர் நகர மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க.,வில் 14 பேர், அ.தி.மு.க.,வில் 5, ஐ.ஜே.கே., 1, சுயேச்சை ஒருவர் என, 21 கவுன்சிலர்கள் உள்ளனர். மறைமலை நகர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை, தி.மு.க., நகர மன்ற தலைவர் சண்முகம் தலைமையில், நகராட்சி கமிஷனர் ரமேஷ் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடந்தது. இதில், 21 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் வரவு - செலவு குடிநீர், மின் விளக்கு, மழைநீர் வடிகால்வாய் திட்டங்கள் என, 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 8வது வார்டு காந்தி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல்வரால் திறக்கப்பட்ட சமுதாயக்கூடம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், தி.மு.க., கட்சி நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. கொளத்துார் குப்பை கிடங்கில் குப்பை கொட்டுவதால் பேரமனுார், சட்டமங்கலம், திருக்கச்சூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அது நிராகரிக்கப்பட்டதால் அ.தி.மு.க.,வினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.