பயணியிடம் ரூ.8,000 ஆட்டோ ஓட்டுநர் கைவரிசை
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் அருகே, பயணியிடம் இருந்து மொபைல் போன், பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தாலுகா, கிழக்கு வினையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி, 45. இவர், தன் உறவினருடன், பெருங்களத்துாரிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு, நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநரின் நண்பரும், அதே ஆட்டோவில் ஏறியுள்ளார். இரவு 10:30 மணியளவில், வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பை தாண்டிய போது, சாலையோரமாக ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது. பின், ஆட்டோ ஓட்டுநரும் அவரது நண்பரும், திடீரென கத்தியைக் காட்டி, செல்வமணி மற்றும் அவரது உறவினரை மிரட்டி, அவர்களிடமிருந்து ஒரு மொபைல் போன் மற்றும் 8,000 ரூபாயை பறித்துக் கொண்டு, ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, செல்வமணி அளித்த தகவலின்படி, கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.