கும்மிடிப்பூண்டி:ஆந்திர எல்லையோரம் உள்ள தமிழக சோதனைச்சாவடியில், பழுதான உபகரணங்களால், பறவை காய்ச்சல் நோய் பரவல் தடுப்பு பணிகளில் சொதப்பல் ஏற்பட்டுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோழிகள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், நெல்லுார் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில், பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன.இதையடுத்து, தமிழகத்தில், பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.அதன்பேரில், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், ஆந்திர எல்லையை ஒட்டி, ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அமைந்துள்ளது. பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதி அருகே, அமைந்திருக்கும் தமிழக சோதனைச்சாவடி ஆகும்.அந்த சோதனைச்சாவடியில், கடந்த இரு நாட்களாக, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கால்நடை மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர் என மூவர் குழு சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர்.ஆந்திராவில் இருந்து வரும் கால்நடை தீவணம் மற்றும் கோழி, வாத்து உள்ளிட்ட பறவைகளை ஏற்றி வரும் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிப்பதில்லை. ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.ஆனால், முறையான நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத பரிதாப நிலையில் எளாவூர் சோதனைச்சாவடி இயங்கி வருகிறது.ஆந்திராவில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும் நிலையில், அதற்கு ஏற்ப நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெயரளவில் தடுப்பு பணி
எளாவூர் சோதனைச்சாவடியில், வழங்கப்பட்ட கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தில் ஒன்று வேலை செய்யவில்லை. மாற்றொன்றில் தோளில் மாட்டும் பட்டை அறுந்துள்ளது. பெயர் அளவில் மட்டும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தமிழக எல்லைக்குள் பறவை காய்ச்சல் நுழையும் அபாயகரமான சூழல் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.நெல்லுார் பகுதிக்கு அருகாமையில் உள்ள தமிழக எல்லையோர சோதனைச்சாவடிக்கு முக்கியத்துவம் அளித்து முறையாக நோய் பரவல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.