உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள்...குவிகிறது!:கடந்த 19 மாதங்களில் 415 வழக்குகள் பதிவு

செங்கையில் அதிகாரிகள் மீது லஞ்ச புகார்கள்...குவிகிறது!:கடந்த 19 மாதங்களில் 415 வழக்குகள் பதிவு

செங்கல்பட்டு அரசு துறை அலுவலகங்களில், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நேரடியாக லஞ்சம் பணத்தை கையாளும் காலம் மாறி, ஜிபே உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மற்றும் இடைத்தரகர்கள் வாயிலாக, வசூல் வேட்டை தாராளமாக நடக்கிறது. புகார் அளிக்க மக்கள் தயங்கும் நிலையிலும், 2023 ஜனவரி முதல் 2024 ஜூலை வரையிலான 19 மாதங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையில், 415 புகார்கள் பதிவாகியுள்ளன.மறைமலை நகர்:தாலுகா, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மின்வாரிய அலுவலகம், நகரமைப்பு அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகங்கள், லட்சக்கணக்கில் பணம் புழங்கும் அலுவலகங்களாக மாறியுள்ளன.கீழ் நிலை ஊழியர்கள் துவங்கி படிப்படியாக படிநிலைகள் உயர உயர, லஞ்சம் வாங்கும் பணத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. சாதாரண பட்டா பெயர் மாற்றம் செய்ய, 5,000 முதல் 8,0000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.பிறப்பு, இறப்பு சான்றிதழ், விவசாயிகளுக்கு வழங்கும் சிட்டா போன்றவற்றிக்கு, சராசரியாக 500 ரூபாய் கேட்டு வாங்கப்படுகிறது.வீட்டு மனைக்கு அப்ரூவல் வழங்க, தடையில்லா சான்று வழங்க, மின் இணைப்பு பெற என, பல்வேறு வகைகளில் வசூல் வேட்டை நடந்து வருகிறது.வசூலில் ஈடுபடும் அதிகாரிகள், பணத்தை நேரடியாக வாங்காமல், இடைத்தரகர்கள் வாயிலாகவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஜிபே உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாகவும், லஞ்சப்பணத்தை பெறுகின்றனர்.பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள் பலரும், அரசு அனுமதித்த உதவியாளர் மட்டுமின்றி, தங்களின் வசூல் பணத்தில் சம்பளம் கொடுத்து, தனியாக உதவியாளர்கள் வைத்துள்ளனர்.லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒரு சிலர் மட்டுமே, லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கின்றனர். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து, சில அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 2023 ஜனவரி முதல் 2024 ஜூலை வரை, சார் - பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட, ஐந்து அரசு துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.கடந்த மாதம் 27ம் தேதி, லத்துார் ஒன்றியம், தண்டரை கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 7,000 ரூபாய் பணத்தை, நண்பர் வாயிலாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், 40, சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதே தினத்தில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 4.26 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், புகாரின் பேரில் சமூகநலத் துறையில் இரண்டு பேரும், வருவாய் துறையில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேற்கண்ட காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆறு பேரும், வருவாய் துறையில் மூன்று பேரும், மருத்துவ துறையில் ஒருவரும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு, என் தந்தை இறந்த பின், தந்தை பெயரில் இருந்த வீட்டை அளவீடு செய்து, என் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, வருவாய் துறையினருக்கு பணம் கொடுத்த பின்னரே, பணிகளை துவங்கினர். லஞ்சம் கொடுப்பதில் உடன்பாடில்லை தான். பணம் கொடுக்க மறுக்கும்பட்சத்தில், மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகிறோம். பணம் கொடுக்க தவறினால், ஆவணங்களில் தவறான விபரங்களை பதிவிட்டு விடுவார்களோ என்ற அச்சமும் உள்ளது.- -பெயர் வெளியிட விரும்பாத வாலிபர்,செங்கல்பட்டு.செங்கை மற்றும் புறநகர் பகுதிகளில், அதிக அளவில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், ஒரு இடம் வாங்கி வீடு கட்டுவது, முகவரி மாற்றம், இருப்பிட சான்றிதழ் பெற என, பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அரசு அதிகாரிகளுக்கு எதிராக, ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே லஞ்ச ஒழிப்பு போலீசாரில் புகார் அளிக்கின்றனர்.- டி.மாரியப்பன்,சமூக ஆர்வலர்,செங்கல்பட்டு.

வருவாய் துறை முதலிடம்

கடந்த 2023 ஜனவரி முதல், 2024 ஜூலை வரை, 30 அரசு துறை அதிகாரிகள் மீது, 415 புகார் மனுக்கள் லஞ்சம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளிக்கப்பட்டு உள்ளன.இதில், 97 மனுக்களுடன் வருவாய் துறை முதலிடத்திலும், 96 மனுக்களுடன் ஊரக வளர்ச்சி துறை இரண்டாம் இடத்திலும், 33 மனுக்களுடன் காவல் துறை மூன்றாவது இடத்திலும் உள்ளது.பத்திரப்பதிவு துறை, மின்வாரியம் மீது 31 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. கல்வித்துறை, போக்குவரத்து துறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மீதும், அதிக அளவில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை