சாய்ந்த நிலையில் மின்கம்பம்
வடக்குபட்டு -- ரெட்டிபாளையம் சாலை 5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையில் குருவன்மேடு -- வடக்குபட்டு இடையே சாலை ஓரம் மின் கம்பங்கள் செல்கின்றன.இந்த மின் கம்பம் வயல் வெளியின் ஓரம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக வயலுக்கு செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த மின் கம்பத்தை சரியாக நட மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம். சதிஷ், ரெட்டிபாளையம்.வண்டலுாரில் இயங்காத சிக்னல்கள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் மேம்பாலம் அருகில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இந்த இடத்தில் தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் சிக்னலில் நின்று இடதுபுறமாக கேளம்பாக்கம் நோக்கியும், வலது புறமாக மண்ணிவாக்கம் நோக்கியும் செல்லும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.செங்கல்பட்டில் இருந்து வரும் வாகனங்கள். வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள சிக்னலில் நின்று வலது புறமாகவும், கேளம்பாக்கம் நோக்கியும், நேராக தாம்பரம் நோக்கியும் செல்லும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த சிக்னல்கள் சில நாட்களாக சரி வர இயங்கவில்லை. போக்குவரத்து போலீசார் அந்த இடத்தில் அதிக அளவில் இல்லை.இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்கின்றனர். இந்த இடத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பழுதான சிக்னலை சீரமைத்து, வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ். ராமச்சந்திரன், வண்டலுார்.புதர்மண்டிய மலைக்கோவில் வளாகம்
திருப்போரூர், பிரணவமலையில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது. விடுமுறை மற்றும் விழா நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர்.இக்கோவிலில் வளாகப்பகுதிகளில் குப்பை கழிவுகளும், முட்செடிகளும் வளர்ந்து புதர் சூழ்ந்துள்ளது. மலைக்கோவில் வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும.- என். சரவணக்குமார், திருப்போரூர்.