டேங்க், பேனர் கம்பத்தில் ஏறி சகோதரர்கள் தற்கொலை மிரட்டல்
திருப்போரூர்,: திருப்போரூர் அடுத்த காலவாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி சில வீடுகள் உள்ளன. இவர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை இந்த வீடுகளை இடிக்க, போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர், திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வந்தனர். ஆனால், வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்கு வசிக்கும் ராஜலிங்கம் என்பவரது மகன் தினேஷ், அங்கிருந்த 60 அடி உயர ராட்சத விளம்பர பேனர் கம்பம் மீது ஏறி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதேபோல் அவருடைய சகோதரர் மதேஷ் என்பவர், அங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இதனால், ஓ.எம்.ஆர்., சாலையில் மேற்கண்ட இரண்டு இடத்திலும் அப்பகுதி மக்கள், சாலையில் பயணித்தோர் குவிந்தனர்.இருவரையும் கீழே இறங்க, போலீசார் பேச்சு நடத்தினர்.ஆனால் அவர்கள், மாற்று இடம் வழங்கி, வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க நிபந்தனை வைத்தனர். இதையடுத்து வருவாய்த் துறையினர், சம்பந்தப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு அருங்குன்றம் ஊராட்சியில் இடம் ஒதுக்கி, சம்பவ இடத்திலேயே பட்டா ஆவணம் வழங்கினர். வீடுகளை காலி செய்ய, 10 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சகோதரர்கள், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கீழே இறங்கினர்.