சிங்கபெருமாள் கோவில் ரயில் தடத்தில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை
சிங்கபெருமாள் கோவில்: இளைஞர்களை குறிவைத்து, சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் இடையே , ரயில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால், போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் இடையே ரயில் தண்டவாளங்களை ஒட்டி திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், விக்னேஷ் கார்டன், சாய் விக்னேஷ் நகர், பகத்சிங் நகர், டாக்கா நகர், பரனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக, மேற்கண்ட பகுதி இளைஞர்களை குறிவைத்து, தண்டவாளங்களின் அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.