கொட்டமேடு டாஸ்மாக் வரும்
வாகனங்களால் இடையூறு
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தில், சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், கொட்டமேடு- -- கூடுவாஞ்சேரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, மது வாங்க கடைக்கு செல்கின்றனர். இதனால், சாலையின் அளவு குறைந்து பேருந்து, வேன், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.டாஸ்மாக் கடையை மையப்படுத்தி செயல்பட்டு வரும் சில கடைகள் போன்றவற்றாலும், மேற்படி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. எனவே, டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.- கே.குமார், கொட்டமேடு.திருக்கச்சூர் சாலையோரம்
சேதமடைந்த மின் கம்பம்
மறைமலை நகர் -- திருக்கச்சூர் சாலையில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவன எதிரில் அமைக்கப்பட்டு உள்ள மின் கம்பம் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது.இதனால், வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடக்கும் போது அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.மேலும், இந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட இரண்டு மின் கம்பங்களில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, இவற்றை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.சுரேஷ், சட்டமங்கலம்.