செங்கை நீதிமன்ற வளாகத்தில்
குரங்குகள் தொல்லையால் அவதி
செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரும் மக்கள், தங்களது இருசக்கர வாகனங்களை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.அப்போது, தங்களது ஆவணங்கள் அடங்கிய பைகளை, இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு, நீதிமன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.திரும்பி வந்து பார்க்கும் போது, இருசக்கர வாகனத்தில் இருந்த பை காணாமல் போயிருக்கும். காரணம், நீதிமன்ற வளாகத்தில் உலாவும் குரங்குகள்.குரங்குகள், பைகளை எடுத்து சென்று, அவற்றில் உள்ள ஆவணங்களை கிழித்து போட்டு விடுகின்றன. தினமும், ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள், நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றன.எனவே, நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- த.சுப்பிரமணியன், செங்கல்பட்டு.
தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
காயரம்பேடு விவசாயிகள் அச்சம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன.இங்கு, தினந்தோறும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆடுகளும், மாடுகளும் இங்கு மேய்ச்சலுக்காக வருகின்றன. இப்பகுதியில், மின் கம்பத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. லேசான காற்று அடித்தாலும், மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி அசைந்தாடுகின்றன. இதனால், விவசாய பணிகளில் ஈடுபடுவோர், அச்சத்துடன் பணி செய்கின்றனர்.இதுகுறித்து, மின் வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.தேவராஜன், காயரம்பேடு.கால்வாயில் கழிவுநீர் தேக்கம்
ஆலப்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு
ஆலப்பாக்கம் ஊராட்சி, பி.டி., நகர் ஆறாவது தெருவில், நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, கழிவுநீர் சீராக செல்வதற்கு ஏற்ப, கால்வாயை துார் வாரி பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சீனிவாசன், ஆலப்பாக்கம்.அறுபடும் நிலையில் உள்ள
மின் கம்பி மாற்றப்படுமா?
மறைமலை நகர் நகராட்சி, என்.ஹெச்.,- 1 தொண்டைமான் தெரு சந்திப்பில் உள்ள வீடுகளுக்கு, மறைமலை நகர் மின் வாரியம் சார்பில் மின் கம்பம் அமைத்து, மின் கம்பிகள் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் செல்லும் மின் கம்பிகள், அறுந்து விழும் நிலையில் உள்ளன. மின் விபத்து ஏதும் ஏற்படும் முன், இந்த மின் கம்பியை மாற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ஜெகன், மறைமலை நகர்.பாழான பழைய கட்டடங்களை
இடித்து அகற்ற கோரிக்கை
திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழுந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் பயன்படுத்திய கட்டடம் சேதமடைந்துள்ளது.அதேபோல், வேளாண் துறை அலுவலகம் பயன்படுத்திய ஒரு பகுதி கட்டடம் சிதிலமடைந்துள்ளது. தற்போது, அந்த கட்டடங்கள் பயன்பாடில்லாமல் உள்ளதால், விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. சில நேரங்களில், மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே, மேற்கண்ட கட்டடங்களை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.விஜயன், திருப்போரூர்.