சென்னை: மாநில அளவிலான 'கிளாசிக் பெஞ்ச் பிரஸ்' சாம்பியன்ஷிப் போட்டியில், முதல் நாளில் நடந்த 'எக்யூப்ட்' பிரிவில், சென்னை அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது. தமிழ்நாடு பவர்லிப்டிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான 'கிளாசிக் பெஞ்ச் பிரஸ்' சாம்பியன்ஷிப் போட்டி, கீழ்கட்டளை பகுதியில் நடக்கிறது. போட்டியில், 'எக்யூப்ட்' மற்றும் 'அன் எக்யூப்ட்' இரு வகைகளில், சப் -- ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில், இருபாலருக்கும் எடை பிரிவு வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், மதுரை என, அனைத்து மாவட்டங்களில் இருந்து,வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று முன்தினம் நடந்த 'எக்யூப்ட்' பிரிவு போட்டியில், 100 வீராங்கனையர் உட்பட 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும், 53 முதல் 120 பிளஸ் வரை என, ஒன்பது உடல் எடை பிரிவில் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. இருபாலரிலும் அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை மாவட்ட அணி, 206 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மேற்கு சேலம் அணி, 76 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.