உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை மே 15க்குள் வைக்க கலெக்டர் உத்தரவு

நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை மே 15க்குள் வைக்க கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக நிறுவங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகளில், வரும் மே 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்து உள்ளார்.செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர் துறை சார்பில், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்பு குழு, பெயர் பலகைகள் தமிழில் அமைத்தல் தொடர்பான கூட்டம், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று நடந்தது. இதில், தொழிலாளர் நல உதவி கமிஷனர் சுதா, கூடுதல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஹோட்டல் சங்க உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஹோட்டல் சங்க, மாவட்ட செயலர் ஜெயசிம்மன் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில் ஹோட்டல்களில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் ஆதார் அட்டையில், 18 வயது உள்ளதாக உள்ளது. இதனால், அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறோம்.சாலையோரங்களில், ஏராளமான பிரியாணி கடைகள் உள்ளன. இங்கு, வடமாநில குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களிடம், தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும்.வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் போது, ஆதார் அட்டை தவிர்த்து, அவர்களது கல்வி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், சரிபார்த்து பணியில் சேர்க்க வேண்டும்.மாவட்டத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள், உறவினர்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.கலெக்டர் அருண்ராஜ் கூறியதாவது:கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் விவரம் தெரிவித்தால், அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தமிழில் பெயர் பலகைகள், மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை