உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இருள் சூழ்ந்த பகிங்ஹாம் பாலம் மாமல்லபுரத்தில் பயணியர் தவிப்பு

இருள் சூழ்ந்த பகிங்ஹாம் பாலம் மாமல்லபுரத்தில் பயணியர் தவிப்பு

மாமல்லபுரம், மாமல்லபுரம் பகிங்ஹாம் கால்வாய் பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து, பயணியர் அச்சத்துடன் செல்கின்றனர்.மாமல்லபுரத்தில், திருக்கழுக்குன்றம் சாலையில் பகிங்ஹாம் கால்வாய் குறுக்கிடுகிறது. இதில் கட்டப்பட்ட ஆங்கிலேயர் கால குறுகிய பாலம், தற்போதைய போக்குவரத்திற்கேற்ப இல்லை. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை புதிய பாலம் அமைக்க, கடந்த 2010ல் கட்டுமான பணிகளை துவக்கி, 10 ஆண்டுகளாக இழுபறியானது.கடந்த 2019ல், பிரதமர் மோடி -- சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்திப்பின் போது பணிகளை முடித்து, ஐந்தாண்டுகளாக புது பாலம் பயன்பாட்டில் உள்ளது.மாமல்லபுரத்தை கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுடன், இப்பாலம் இணைக்கிறது. உள்ளூர், சுற்றுலா வாகனங்கள் இதன் வழியாக கடந்து செல்கின்றன. பல ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை இந்த பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, இருசக்கர வாகன பயணியர், இரவில் நிலைதடுமாறி, விபத்துக்களில் சிக்குகின்றனர்.பூஞ்சேரியிலிருந்து, மாமல்லபுரத்திற்கு நடந்து சென்று வீடு திரும்பும் கூலித்தொழிலாளர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பாலத்தில் நடந்து செல்கின்றனர். ஆனால், பாதசாரிகளுக்கான நடைமேடையும் இல்லாததால், இருளில் தடுமாறி, விபத்து அபாயத்துடன் செல்கின்றனர். இதற்கு தீர்வாக, பழைய, புதிய பால சாலைகள் இணையும் சந்திப்புகளில், உயர் கோபுர மின்விளக்கு அல்லது பாலத்தின் இருபுறம், எல்.இ.டி., விளக்குகளை அமைக்கலாம்.நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் மின்விளக்குகள் அமைத்துள்ள பேரூராட்சி நிர்வாகம், பாலம் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி, மின்விளக்கு அமைக்க முன்வரவில்லை. நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று, மின் விளக்கு அமைக்க முயற்சிக்காமல், மெத்தனமாக உள்ளது. எனவே, பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி