உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆயத்த செங்குத்து வடிகால் முறை தொழில்நுட்பத்தில் பரமன்கேணியில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

ஆயத்த செங்குத்து வடிகால் முறை தொழில்நுட்பத்தில் பரமன்கேணியில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

செய்யூர்: செய்யூர் அடுத்த பரமண்கேனி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, ஆயத்த செங்குத்து வடிகால் முறை தொழில்நுட்பத்தில் பாலத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை –- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, தமிழக கடலோர பகுதிகளின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. சென்னை, புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மாமல்லபுரம் –புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் 1,270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளுக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், எரி உபரி நீர் வடிகாலில் இருந்து கடலில் கலக்கும் கழிவெளிப்பகுதி அருகே நிலத்திற்கு அடியில் சகதியான சதுப்புநில அமைப்பை கொண்டுள்ளது. இதன் மீது கனமான சாலைகள் மற்றும் பாலங்கள் அமத்தால் நிலம் உள்வாங்கி கட்டுமானங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. இதனால், ப்ரீபேப்ரிகேட்டட் வெர்டிகல் ட்ரையின் எனப்படும் ஆயத்த செங்குத்து வடிகால் முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலம் அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைதுறையினர் கூறியதாவது: அதன்படி, செய்யூர் அடுத்த பரமன்கேணி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணியில் இந்த தொழில்நுட்பம் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலம் மற்றும் சாலை அமைக்கப்படும் இடத்தில் நிலப்பரப்பை விட 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பின், 1 அடி உயரத்திற்கு ஜல்லிக்கற்கள் நிரவப்படுகின்றன. பின் ராட்சத இயந்திரத்தால் ஆயத்த செங்குத்து வடிகால் முறையில், வளையும் தன்மை உடைய குழாய் பூமிக்கு அடியில் 20 மீட்டர் நீளத்திற்கு செலுத்தப்படுகிறது. இதையடுத்து அதன்மீது கனமான சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்படும் போது, அடித்தளத்தில் சகதியில் உள்ள தண்ணீர் வெர்டிகல் ட்ரையின் வழியாக வெளியேறி, அடித்தளம் உலர்ந்து பலமானதாக மாறும். இதனால் பாலம் மற்றும் சாலையின் உறுதித் தன்மை அதிகாரிக்கும். இதே போல மரக்காணம் அருகே நாரவாக்கம் பகுதியிலும் இந்தமுறையை பயன்படுத்தி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி