வளைவில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் அபாயம்
மறைமலை நகர்:மறைமலை நகர் அருகே பாலுாரில், நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் நிலவுவதால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், பாலுார் ரயில் நிலையம் அருகே, ரயில்வே துறையின் குடிநீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், இந்த தொழிற்சாலையில் இருந்து தண்ணீர் 'பாட்டில்'களை ஏற்றிச் செல்கின்றன. இந்நிலையில், இந்த சரக்கு வாகனங்கள் நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பாலுாரில் சாலை வளைவில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது தெரியாமல், இருசக்கர வாகனங்களில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, இந்த பகுதியில் சரக்கு வாகனங்களை நிறுத்த, போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.