பாலுார் சாலையில் மரண பள்ளங்கள் நெடுஞ்சாலை துறை அலட்சியம்
மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் - ஒரகடம் சாலை, 12 கி.மீ., துாரம் கொண்டது.இச்சாலை இடையே கொளத்தாஞ்சேரி, பாலுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், பாலுாரைச் சுற்றியுள்ள கிராமங்களான வில்லியம்பாக்கம், ரெட்டி பாளையம், கரும்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.அதிக அளவில் இருசக்கர வாகனங்களும், கல் அரவை நிறுவனங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.இந்த சாலையின் நடுவே பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலையில் ஆங்காங்கே இடைவெளி விட்டு உள்ள பள்ளங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுகின்றனர்.இந்த சாலை மாவட்ட எல்லையில் உள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சமீபத்தில் இச்சாலையில் பழுதடைந்து நின்ற இரண்டு மண் லாரிகள், மணல் மற்றும் கற்களை சாலை நடுவே கொட்டி விட்டு சென்று உள்ளன. அதனால், இந்த பகுதியில் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மணல் மற்றும் கற்களை அகற்றி, சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.