உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திரளாக குவிந்த பக்தர்கள்

 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திரளாக குவிந்த பக்தர்கள்

திருப்போரூர், டிச. 29- திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், விடுமுறை தினமான நேற்று, அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். திருப்போரூர் கோவிலில் மூலவர் கந்த சுவாமி, சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் அதிகமாக வர ஆரம்பித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர். எடைக்கு எடை துலாபாரம் செலுத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கும், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். இம்மாதம் விரதமிருந்து, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள், அங்கு வழிபாடு முடித்துவிட்டு, திருப்போரூர் கந்த சுவாமி கோவிலுக்கும் வந்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர். அடிப்படை வசதி தேவை திருப்போரூர் கோவில் நிர்வாகம், பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சுவாமி தரிசனத்துக்கு தனி வழி இல்லை. அத்துடன் மருத்துவ உதவி மையம், சரவண பொய்கை குளத்தில் குளிப்பதற்கு தனி இடவசதி, பிரத்யேக கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமித்தல் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இவற்றை செய்து தர, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை