புதிய அங்கன்வாடி மைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
அச்சிறுபாக்கம், :சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் ஊராட்சியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.அங்கன்வாடி மைய கட்டடம் மிகவும் பழமையானதால், இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.பின், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 2020 -- 21ம் நிதியாண்டில், 10.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.இந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்காலிகமாக இ -- சேவை மைய வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.கடந்தாண்டு, செய்யூர் எம்.எல்.ஏ., பாபு, அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.ஆனால், புதிய கட்டடம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல், கடந்த ஓராண்டாக மூடப்பட்டு உள்ளது.இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர், ஊராட்சி நிர்வாகம், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, போதிய வசதிகளின்றி இ--சேவை மைய வளாகத்திலுள்ள குழந்தைகளை, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்திற்கு மாற்ற ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.