| ADDED : ஜன 02, 2024 09:26 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே பூரியம்பாக்கம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.மதுராந்தகம்- வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, பூரியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் 800 மீட்டர் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையே கிராமத்தின் பிரதான சாலையாகும்.இதில், 150 மீட்டர் சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை பழுதடைந்ததால், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆக., மாதம் பணிகள் துவங்கியது.வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி பெறாமல், சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால், வனத்துறையினர் வாயிலாக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.பின், இரண்டு மாதங்களுக்கு முன் அனுமதி பெற்று, ஜல்லிக் கற்கள் மட்டும் கொட்டப்பட்டது.ஆனால், தற்போது வரை சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், இச்சாலையில் சென்று வர கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.மேலும், இந்த ஜல்லிக் கற்கள் நிறைந்த சாலையில், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.