திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பாரத சாரண - சாரணியர் பயிற்சி மைய வளாகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஒரே நாளில், 1,425 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, நடந்தது.இவ்விழாவில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, திருப்போரூர் வட்டத்தை சேர்ந்த 513 பேர், திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த 912 பேர் என, 1,425 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.மேலும், தோட்டக்கலைத் துறை சார்ந்த தர்ப்பூசணி விதை தொகுப்பு, மருந்து தெளிக்கு இயந்திரம் ஆகியவற்றை, இரண்டு பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.அதேபோல், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஒன்றியங்களில், 1.29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 11 கட்டடங்களையும் அமைச்சர் திறந்து வைத்தார்.விழாவில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி.,செல்வம், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், துணைத்தலைவர் சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவில், அமைச்சர் பேசியதாவது:திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டங்களில், 1,425 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 17.2 கோடி.ஏற்கனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, வண்டலுார் ஆகிய வட்டங்களில், 4,487 பேருக்கு, 130.17 கோடி ரூபாய் மதிப்பில், மறைமலை நகரில் நடந்த நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது.இரண்டாவது கட்டமாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கடன் பெறுதல் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பட்டா அவசியமாகி விட்டது. இன்னும் தகுதியுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கேளம்பாக்கம், மேலச்சேரியில் புதிய நியாயவிலை கடை, வளர்குன்றம், மாடம்பாக்கம், சிறுங்குன்றம், தாழம்பேடு, பொன்பதிர்கூடம் உள்ளிட்ட இடங்களில் அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட 11 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.தேர்தலில் அறிவிக்கப்பட்ட 90 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எடுத்துக்காட்டாக, மகளிர் உரிமைத்தொகை தமிழகம் முழுதும் 1.13 கோடி பேருக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு மாதத்திற்கு 1,130 கோடி ரூபாய் செலவாகிறது. ஒரு ஆண்டிற்கு 13,560 கோடி ரூபாய் செலவாகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 3,07,063 மகளிருக்கு, மாதம் 30.70 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 368.47 கோடி ரூபாய் செலவு ஆகிறது. விவசாய கடன் தள்ளுபடியில், தமிழகம் முழுதும் 1,17,617 பேர் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.