காட்டாங்கொளத்துார் பி.டி.ஓ., ஆபீசில் தி.மு.க., பெண் கவுன்சிலர் திடீர் தர்ணா
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தி.மு.க., பெண் கவுன்சிலர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. காட்டாங்கொளத்துார்வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று, ஒன்றிய பெருங்குழு தலைவர் உதயா தலைமையில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.அப்போது, திம்மாவரம் ஊராட்சி தி.மு.க., கவுன்சிலர் அருள்தேவி கூட்டத்தை புறக்கணித்து, வட்டார வளர்ச்சி அலுவலக வன நுழைவு பகுதியில், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை கைவிட கோரியும், அதை மறுத்த அருள்தேவி, தன்னிச்சையாக செயல்படும் திம்மாவரம் ஊராட்சிதலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 30 நிமிடத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டார்.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அருள்தேவி போராட்டத்தை கைவிட்டார்.இதுகுறித்து, அருள்தேவி கூறியதாவது:திம்மாவரம் ஊராட்சி தலைவர் நீலமேகம், அரசு இடத்தில் சொந்த நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, தனிநபர் பெயரை வைத்துள்ளார். இதை தடுக்க கோரி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, திம்மாவரம் ஊராட்சி தலைவர் நீலமேகம் கூறியதாவது:குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்க, ஊராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொதுமக்கள்கோரிக்கையை ஏற்று, என் சொந்த செலவில் அமைக்கப்பட்டது. திறப்பது குறித்து, அதிகாரிகளுக்கு முறையாக மனு அளிக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலர் தான், மக்கள் பணிக்கு எதிராக உள்ளார். போராட்டத்திற்குப் பின் அதிகாரிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலைய மின் இணைப்பை துண்டிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.