டிரைவர் மண்டை உடைப்பு போதை நபர்கள் அட்டூழியம்
கூடுவாஞ்சேரி:சென்னை அசோக் நகரில் தங்கி, கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருபவர் சரவணன், 24. இவர், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி 'மாருதி ஸ்விப்ட்' காரில் சென்று கொண்டிருந்தார்.வண்டலுார் மேம்பாலம் அருகே வந்தபோது, குடிபோதையில் 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த செங்கல்பட்டைச் சேர்ந்த பாலாஜி, 24, ஆசிக், 19, தரணி, 22, ஆகிய மூவரும், காரின் முன் பகுதியில் மோதுவது போல் வந்து, ரகளையில் ஈடுபட்டனர். மூவரும் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஹெல்மெட்டால் சரவணனை தாக்கினர். இதில், சரவணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, சரவணன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தார்.புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சரவணனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.