போதை வஸ்துகள் ரெய்டு விபரம் வெளியீடு 7 கல்லுாரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
தாம்பரம், தாம்பரம் அருகே போதை பரவலை தடுக்க, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பொத்தேரி, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் பகுதிகளில், கடந்த 26ம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 12 இடங்களில், ஒரே நேரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கஞ்சா, கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், நேற்று காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் கூறியதாவது: போதை பொருட்கள் பரவலை தடுக்கும் நோக்கில், சோதனை நடத்தப்பட்டது. இதில், ஒரு உதவி கமிஷனர், 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப் - இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 60 போலீசார் அடங்கிய குழு ஈடுபடுத்தப்பட்டது. ஒரே நேரத்தில், 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு தனி வீடுகள், ஒரு பான் கடை, இரண்டு பெட்டி கடைகள், ஒரு காபி ஷாப், ஒரு சாலையோர கடை உள்ளிட்டவற்றில், சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில், 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லேட், ஹூக்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஏழு கல்லுாரி மாணவர்கள் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, மறைமலை நகர் காவல் நிலையத்தில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் போலீஸ் கமிஷனரக பகுதிகளில், இந்தாண்டு இதுவரை 318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,516 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 314 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,208 கிலோ போதை பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொடர் போதை பொருட்கள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய, 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் வாங்கும் மூலாதாரங்கள், வினியோக வலைதளங்கள் மற்றும் வியாபார குழுக்கள் மீது, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.