மறைமலை நகரில் போக்குவரத்து சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
மறைமலை நகர்:மறைமலை நகர் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து,'சிக்னல்' இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதற்கு தீர்வாக, இப்பகுதியில்,'சிக்னல்' அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மறைமலை நகரில் சாமியார் கேட் சந்திப்பு உள்ளது.இந்த சந்திப்பு வழியாக மறைமலை நகர் 'சிப்காட்' தொழிற்பேட்டையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு பொருட்கள் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.சுற்றியுள்ள பேரமனுார், சட்ட மங்கலம், திருக்கச்சூர் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல்வேறு தேவைகளுக்கு மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளின் போது அகற்றப்பட்டன. ஆனால், பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை போக்குவரத்து சிக்னல் அமைக்கப்படவில்லை.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக பள்ளி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு, விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த சாலையை கடப்பது பெரும் சவாலாக உள்ளது.வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்தில் சிக்கி மருத்துவ செலவு, சேதமடைந்த வாகனங்களை பழுது நீக்கும் செலவு என, வாகன ஓட்டிகள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற விபத்துகளில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; பலர் உடல் உறுப்புகளை இழந்தும் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.மறைமலை நகர் பகுதியில் போக்குவரத்து சிக்னல் இல்லாததால் நடைபெறும் விபத்துகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எடுத்துக் கூறியுள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன், ஜி.எஸ்.டி., சாலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.- போக்குவரத்து போலீசார்