உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேளாண் விரிவாக்க மையங்களில் அறுவடை இயந்திரம் வழங்க எதிர்பார்ப்பு

வேளாண் விரிவாக்க மையங்களில் அறுவடை இயந்திரம் வழங்க எதிர்பார்ப்பு

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில், 84 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகள், 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளன.விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.ஏரி, ஆறு, குளம், தாங்கல், கிணறு, ஆழ்துளைக் கிணறு போன்ற நீராதாரங்கள் வாயிலாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை, பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகின்றன.இப்பகுதியில் அதிகப்படியாக சம்பா பருவத்தில் பொன்னி, பி.பி.டி., குண்டு, எல்.என்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள், 15,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டுள்ளன.தற்போது, நெல் கதிர்கள் முதிர்ந்துள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வாயிலாக அறுவடை செய்தால், ஒரு மணிநேரத்திற்கு 1,800 முதல் 2,000 ரூபாய் கட்டணம் தர வேண்டும். ஆனால், வேளாண் பொறியியல் துறை வாயிலாக இயந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் போது, ஒரு மணிநேரத்திற்கு 1,220 ரூபாய் மட்டுமே செலவாகும்.செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதி முழுதும், மதுராந்தகம் வேளாண் பொறியியல் துறையின் கீழ் செயல்படுகிறது.இங்கு, வேளாண் துறையின் மூன்று நெல் அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளதால், இரண்டு வட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.இதனால் விவசாயிகள், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களை நாடிச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.அதனால், சித்தாமூர் மற்றும் பவுஞ்சூர் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில், வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து விவசாயி சங்கர் என்பவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளாக, நெல் விவசாயம் செய்து வருகிறேன்.தனியார் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்தால், ஒரு மணி நேரத்திற்கு 2,000 ரூபாய் செலவாகிறது.வேளாண் பொறியியல் துறை அறுவடை இயந்திரம், ஒரு மணிநேரத்திற்கு 1,220 ரூபாய் வாடகைக்கு கிடைக்கிறது.கடந்த 3 ஆண்டுகளாக, அறுவடைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்,'உழவன்' செயலியில் பதிவு செய்து, வேளாண் பொறியியல் துறை நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்தேன்.இந்த ஆண்டு மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது நான் பதிவு செய்ய தவறியதால், வேளாண் பொறியியல் துறை நெல் அறுவடை இயந்திரம் கிடைக்கவில்லை, இதனால், நெற்பயிர் வெயிலில் காய்ந்து சேதமடைகிறது.இதனால், தனியார் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு, அதிக பணம் கொடுத்து அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.செய்யூர் வட்டார பகுதி மக்கள் பயனடையும் வகையில், சித்தாமூர் மற்றும் பவுஞ்சூர் வேளாண் விரிவாக்க மையங்களில் வாடகைக்கு நெல் அறுவடை இயந்திரம் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை