விழும் நிலையிலுள்ள பட்டுப்போன மரம் திருக்கழுக்குன்றத்தில் விபத்து அபாயம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், முறிந்து விழும் நிலையிலுள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டு மென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் சாலையிலுள்ள சந்தை பகுதியில் மளிகை, காய்கறிகள், இறைச்சி கடை உள்ளிட்ட கடைகள் அதிகம் உள்ளன. திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், இங்குள்ள கடைகளுக்குச் செல்கின்றனர். திருக்கழுக்குன்றம் - கல்பாக்கம் பகுதி வாகனங்கள், அரசு பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன. இங்குள்ள உயரமான காட்டுவாகை மரம், சாலை பகுதி வரை படர்ந்துஉள்ளது. இந்த மரத்தின் கிளைகள் பட்டுப்போன நிலையில், சூறாவளி காற்றில் முறிந்து சாலையில் செல்வோர், வாகனங்கள் மீது விழும் ஆபத்து உள்ளது. சாலையில் இந்த மரம் உள்ளதால், வாகனங்கள் ஒதுங்க இடமின்றி, போக்கு வரத்திற்கும் இடையூறாக உள்ளது. எனவே, இந்த பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.