உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்போரூர்:முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால், துார்வாரி சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 63 ஏரிகள் உள்ளன. இதில் முள்ளிப்பாக்கம் ஏரி, 250 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியில், மூன்று மதகுகள் உள்ளன. இவற்றில், ஒரு மதகின் நீர்ப்பாசன கால்வாய் முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கும், இரண்டு மதகுகளின் நீர்ப்பாசன கால்வாய்கள் பூயிலுப்பை கிராமத்திற்கும் செல்கின்றன. இந்த மூன்று கால்வாய்கள் மூலமாக, 300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் 4 கி.மீ., நீர்ப்பாசன கால்வாயை சீரமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த 2022ம் ஆண்டு, 1 கோடி ரூபாய் செலவில், கால்வாயை துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக கட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது, இந்த நீர்ப்பாசன கால்வாய் இருப்பதற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு செடிகள், மரங்கள் வளர்ந்து மூடியுள்ளன. எனவே, முள்ளிப்பாக்கம் ஏரி நீர்ப்பாசன கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி