உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பில் சிக்கிய உபரிநீர் கால்வாய் மீட்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்பில் சிக்கிய உபரிநீர் கால்வாய் மீட்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே தின்னலுாரில், ஏரிக்கு உபரிநீர் செல்லும் ஓடையை, தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால், தங்களது நிலத்திற்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கால்வாயை மீட்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அச்சிறுபாக்கம் அருகே தின்னலுார் ஊராட்சியில், 500 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், வடமணிப்பாக்கம் கிராமம் ஏரிக்குச் செல்லும் வகையில், உபரி நீர் கால்வாய் உள்ளது. அகலமான இந்த கால்வாயில் தண்ணீரில்லாத நிலையில், பல ஆண்டுகளாக விவசாயிகள் டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் ஆகியவற்றை, தங்களது விவசாய நிலத்திற்கு கொண்டு செல்லும் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தனி நபர் ஒருவர் இந்த கால்வாயை ஆக்கிரமித்து, 'பொக்லைன்' இயந்திரத்தால் பள்ளம் தோண்டி, பொது வழியை தடுத்துள்ளார். இதனால், விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சினேகா, மதுராந்தகம் வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியில் உள்ளனர். எனவே, வருவாய்த்துறை மற்றும் பாசனப் பிரிவு அதிகாரிகள், கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து, தின்னலுார் விவசாயிகள் கூறியதாவது: தின்னலுார் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் இந்த கால்வாயை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதால், விவசாய நிலத்திற்கு செல்ல முடியவில்லை. அறுவடை நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பிலிருந்து கால்வாயை மீட்க வருவாய்த் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி