கொல்லம்பாக்கம் ஏரி கலங்கல் சேதம் சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
சித்தாமூர்:சித்தாமூர் அருகே கொல்லம்பாக்கம் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரியின் வாயிலாக, 200 ஏக்கர் பரப்பளவு வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. ஏரியின் கலங்கல் பகுதி, பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளதால், ஏரியில் இருந்து கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.பருவ மழையின் போது, ஏரி முழு கொள்ளளவை எட்டினால், கலங்கல் பகுதி முழுதும் உடைந்து, தண்ணீர் விவசாய நிலங்களில் பெருக்கெடுத்து, பயிர் சேதம் ஏற்படும்.மேலும், கலங்கல் உடைந்தால், அதன் வழியாக ஏரி நீர் ழுழுதும் வெளியேறி, கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவ மழைக்கு முன், சேதமடைந்துள்ள கலங்கல் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.