உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கல்பட்டு புறநகரில் கஞ்சா விற்பனையால் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதால் அச்சம்

 செங்கல்பட்டு புறநகரில் கஞ்சா விற்பனையால் கொலை சம்பவங்கள் அதிகரிப்பதால் அச்சம்

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில், கஞ்சா விற்பனை தொடர்பாக நடைபெறும் கொலை சம்பவங்களால், பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் புறநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் போட்டி காரணமாக, கொலைகள் நடைபெற்று வந்தன. போலீசார் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, வண்டலுார், மண்ணிவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, எந்தெந்த பகுதியில் யார் யார் கஞ்சா விற்பனை செய்வது என்ற போட்டியும், விற்ற பணத்தை பிரிப்பது போன்ற காரணங்களாலும், அடிக்கடி கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி, தைலாவரம், கீரப்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலை, மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால், கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கஞ்சா விற்பனை என்பது இன்றைய காலகட்டத்தில், புறநகரின் குக்கிராமங்கள் வரை பரவி உள்ளது. போலீசாருக்கு தெரிந்தே, பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் போது மட்டும், போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். கடந்த ஆண்டு இரண்டு முறை, பொத்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், 1,000 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனாலும், சொல்லிக்கொள்ளும் வகையில் கஞ்சா பறிமுதல் செய்யப்படவில்லை. சிறு விற்பனை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறும் போலீசார், மொத்த விற்பனையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. முறையாக காவல் நிலையத்தின் எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் கஞ்சாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். கஞ்சா வழக்குகள் தாம்பரம் மாநகர கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் இந்த ஆண்டு ஜன., மாதம் முதல் நவ., மாதம் வரை, 3,054 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின், இந்த கஞ்சா அழிக்கப்பட்டது. செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 2024 -- 2025ம் ஆண்டு அக்., வரை, கஞ்சா விற்பனை தொடர்பாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 366 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 3 ஆண்டுகளில் கொலை சம்பவங்கள் * கஞ்சா விற்பனை தொழில் போட்டியில், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில், மறைமலை நகர் அடுத்த தைலாவரம் பகுதியில், சந்துரு, 22, என்பவர், வீட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். *கஞ்சா விற்ற பணத்தை பிரிப்பது தொடர்பாக, தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியைச் சரவணன் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில், ஏற்பட்ட சண்டையில், செட்டி புண்ணியம் ஏரிக்கரையில் வைத்து, கடந்த ஜனவரியில் சரவணன் அடித்துக் கொல்லப்பட்டார். * கடந்த 27ம் தேதி, சிங்கபெருமாள் கோவில் அடுத்த காச்சேரிமங்கலம் ஏரியில், பரனுார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், கஞ்சா வாங்கியதற்கான பணத்தை திரும்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட சண்டையில், நண்பர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். * கூடுவாஞ்சேரி பகுதியில் இரட்டை கொலை, காட்டாங்கொளத்துார் பகுதியில் கடந்த மே மாதம் நடந்த இரட்டை கொலை சம்பவங்களின் பின்னணியிலும், கஞ்சா போதை காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.- நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை