சிறப்பு பேருந்து என்ற பெயரில் பெண்களிடம் கட்டண வசூல்
மாமல்லபுரம் : செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு, அரசு பேருந்து தடம் எண் 508 இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில், பெண்களுக்கு கட்டணமில்லை.சில பேருந்துகளே இயக்கப்படுவதால், செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில், பேருந்து எப்போது வரும் என, பயணியர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.வார விடுமுறை நாட்களில், இங்குள்ள சிற்பங்களை காண, பயணியர் குவிகின்றனர். இதையடுத்து, செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரத்திற்கு, தடம் எண் இன்றி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த பேருந்துகளில், பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில், பெண்களுக்கு கட்டணம் வசூலித்தனர்.இதனால் பயணியர், நடத்துனர் இடையே தகராறு ஏற்பட்டது. பெண்களுக்கு கட்டணம் உண்டு என்பதை, முகப்பு கண்ணாடி, படிகள் பகுதிகளில், பயணியர் பார்வையில் படுமாறு ஸ்டிக்கர் ஒட்டினால், இச்சிக்கல் ஏற்படாது என, பயணியர் தெரிவித்தனர்.