காஞ்சிபுரம், : குறைந்த கட்டணத்தில், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு, விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம். தனியாரை காட்டிலும், கூட்டுறவு துறையில், குறைந்த வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அத்துறையினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், 264 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்குகின்றன.இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன், ஆடு, மாடு பராமரிப்பு கடன், உரங்கள் விற்பனை ஆகிய பணிகள் செய்து வருகின்றன.நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தால், விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக, நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல் ஆகிய பல வித பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், விவசாயத்தில் வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.வேளாண் இயந்திரங்கள் வைத்திருக்கும் நபர்கள் டீசல் விலை உயர்வு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாய பணிகள் செய்வதற்கு தங்களுக்கு சவுகரியமான கட்டணத்தை நிர்ணயம் செய்து அதிகமாக வசூலித்து வருகின்றனர்.இதனால், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் இன்றி பரிதவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, முதல் முறையாக, வேளாண் இயந்திரக் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விட முடிவு செய்து உள்ளது.குறிப்பாக, உழவு ஓட்டுவதற்கு டிராக்டர், நெல் அறுவடை செய்வதற்கு அறுவடை இயந்திரம், விளைப்பொருட்களை ஏற்றி செல்வதற்குலாரி, ஆளில்லாத உரம் தெளிப்பதற்கு ட்ரோன் ஆகிய இயந்திரங்களை வாடகைக்கு விடுவதற்கு, கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.உதாரணமாக, ஒரு மணி நேரத்திற்கு நெல் அறுவடை இயந்திரத்திற்கு வாடகை கட்டணம் 2,400 ரூபாய்க்கு மேலே தனியார் வசூலிக்கின்றனர். அதே வாகனத்திற்கு, 2,200 ரூபாய் வாடகை கட்டணமாக கூட்டுறவு துறையினர் குறைத்து வசூலிக்கின்றனர்.இது, தனியாரை காட்டிலும், கூட்டுறவு துறையில் குறைந்த கட்டணமாக வாடகைக்கு வசூலிக்கின்றனர். இது, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, கூட்டுறவு துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ கூறியதாவது:விவசாயத்திற்கு, வேளாண் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து இருப்பதால், அதிக வாடகை கட்டணத்தில், தனியாரை நாட வேண்டி உள்ளது. இது, விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது.இதை தவிர்க்க, கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் மூலமாக, குறைந்த கட்டணத்தில் வாடகை இயந்திரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த சேவை பெற, உழவன் செயலி மூலமாக வாடகை இயந்திரங்கள் பகுதியில் சென்று விண்ணப்பித்து, பயன் பெறலாம்.இதுதவிர, 044- 27238920 / 90430 46100 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கட்டண விபரம்
இயந்திரங்கள் தனியார் வாடகை -ஒரு மணி நேரத்திற்கு கூட்டுறவு துறை வாடகைபெல்ட் அறுவடை இயந்திரம் 2400 2200டயர் அறுவடை இயந்திரம் 1600 1500ட்ரோன் 600 500சுழலும் கலப்பை 1400 1100