மீன்பிடி வலையில் சிக்கும் கடல் பாம்புகளால் மீனவர்கள் அச்சம்
மாமல்லபுரம்: மீன்பிடி வலைகளில் கடல் பாம்புகள் அதிக அளவில் சிக்குவதால், மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மீனவர்கள், கானத்துார் ரெட்டிக்குப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை வசிக்கின்றனர். வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர். கடல் ஆமைகள், இனப்பெருக்கத்திற்கு முட்டையிட, டிச., - பிப்., மாதங்களில், கரையை நோக்கி படையெடுக்கும். கரைக்கு வரும் போது, மீன்பிடி வலைகளில் சிக்கி, படகில் மோதி இறக்கின்றன. இது ஒருபுறமிருக்க, ஆண்டு இறுதி மாதங்களில், கடல் பாம்புகள் அதிக அளவில் மீன்பிடி வலையில் சிக்குவதால், மீனவர்கள் அச்சப்படுகின்றனர். கடலில் பல வகை பாம்புகள் உள்ள நிலையில், சில வகை பாம்புகள் அதிக விஷத் தன்மை கொண்டதாக உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, அதிக அளவு பாம்புகள் வலையில் சிக்குவதால், மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். வாயலுார் உய்யாலிகுப்பத்தைச் சேர்ந்த மீனவர் ராமசாமி என்பவர் கூறியதாவது: கடற்கரையில் இருந்து, பல 'நாட்டிக்கல்' மைல் தொலைவில் தான், பாம்புகள் உள்ளன. கடலில் வண்டல் கலந்து, நீருக்குள் கருப்பாக மாறி, இருளாக இருக்கும். இதனால், வெளிச்சத்திற்காக பாம்புகள் மேலே வரும். இப்போதும், அப்படி வந்து வலையில் சிக்குகின்றன. அதை லாவகமாக பிடித்து, கடலில் விட வேண்டும். சில நேரம் கடல் சாரை பாம்புகள் கடிக்கின்றன. அது கடித்ததுமே கரைக்கு வந்து சிகிச்சை பெற்றால், எந்த பாதிப்பும் இல்லை. இல்லாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.