உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வலை பாதுகாப்புக்கூடம் இல்லாமல் மீனவர்கள் தவிப்பு! மர்ம நபர்கள் வலைகளை தீ வைத்து எரிப்பதால் வேதனை

வலை பாதுகாப்புக்கூடம் இல்லாமல் மீனவர்கள் தவிப்பு! மர்ம நபர்கள் வலைகளை தீ வைத்து எரிப்பதால் வேதனை

கூவத்துார்:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், தங்களின் மீன் வலைகளை பாதுகாப்பாக வைக்க, வலை பாதுகாப்புக்கூடம் அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடற்கரைப் பகுதி, கானத்துார் ரெட்டிக்குப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைக்குப்பம் வரை, 75 கி.மீ., நீளத்திற்கு உள்ளது. இதற்கிடையில், 51 மீனவ பகுதிகள் அமைந்துள்ளன. வாழ்வாதார தொழிலாக, 7,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு, 'பைபர்' படகுகளில், கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில், மீன்வளத் துறை சார்பில் மீனவர்களின் நலன் கருதி, மீன் வலை பாதுகாப்புக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, மீனவர்கள் தங்களின் வலைகளை வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், கடலுார், பெருந்துறவு போன்ற பெரும்பாலான மீனவ கிராமங்களில், மீன் வலை பாதுகாப்புக்கூடம் இல்லை. பனையூர்குப்பம், தழுதாளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மீன் வலை பாதுகாப்புக்கூடங்கள் சேதமடைந்து உள்ளதால், மீனவர்கள் தங்களின் வலைகளை, திறந்தவெளியில் வைத்துள்ளனர். இதனால், வெயில் மற்றும் மழையில் வீணாகி, விரைவில் மட்கி வலைகள் அறுந்து விடுகின்றன. மேலும் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் ஏற்படும் ராட்சத அலைகளில், திறந்தவெளியில் வைக்கப்படும் மீன் வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன. இதனால், மீனவர்களுக்கு பெரும் பொருட்சேதம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், பெரும்பாலான மீனவ கிராமங்களில் வலைபின்னும் கூடமும் இல்லாததால், கிழிந்த வலைகளை பின்ன இடவசதி இல்லாமல், மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மீன் வலை பாதுகாப்புக்கூடம் இல்லாததால், கடலோரத்தில் தற்காலிகமாக குடிசைகள் அமைந்து, வலைகளை அங்கு வைக்கின்றனர். இந்த குடிசைகளில் மின்விளக்கு வசதி மற்றும் கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வலைகளை தீயிட்டுக் கொளுத்துகின்றனர். எனவே, மீன்வளத் துறை அதிகாரிகள் கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து, மீன் வலை பாதுகாப்பு மையம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடப்பாக்கம்குப்பத்தில் பல ஆண்டுகளாக, மீன் வலை பாதுகாப்புக்கூடம் வசதி இல்லை. இதனால், வலைகள் திறந்தவெளியில் வைக்கப்படுவதால், வெயிலில் மட்கி வீணாகின்றன. இரவு நேரத்தில் மர்ம நபர்கள், வலைகளுக்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால், மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. - மா.சசிகுமார், கடப்பாக்கம்குப்பம். கடந்த 40 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். மீனவர்கள் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய்க்கு வலை வாங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புக்கூடம் இருந்தால் பத்திரப்படுத்தி, 8 முதல் 10 ஆண்டுகள் வரை மீன் வலைகளை பயன்படுத்தலாம். ஆனால் வலை பாதுகாப்புக்கூடம் வசதி இல்லாமல், வெயிலில் வலைகளை வைப்பதால், ஓராண்டுக்குள் மீன் வலைகள் மட்கி வீணாகின்றன. இதனால், ஆண்டுதோறும் மீனவர்கள் புதிய வலைகள் வாங்க வேண்டி உள்ளதால், பெரும் பொருட்செலவு ஏற்படுகிறது. - த.ஜெயசங்கர், கடலுார் பெரியகுப்பம். மீன் வலைகள் எரிப்பு கடந்தாண்டு ஜனவரியில், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பத்தில், குடிசையில் வைக்கப்பட்டு இருந்த வேல்பழனி என்பவருக்குச் சொந்தமான, 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன் வலையை, மர்ம நபர்கள் இரவோடு இரவாக தீ வைத்து எரித்தனர். அடுத்த சில நாட்களில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், லோகு உள்ளிட்ட 10 மீனவர்களுக்குச் சொந்தமான, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன் வலைகளை, மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இவ்வாறு தொடர்ந்து, மீன் வலைகளுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி