நெம்மேலியில் கடலரிப்பு பாதிப்பு மீனவர்கள் உண்ணாவிரதம்
மாமல்லபுரம்:நெம்மேலியில், கடலரிப்பு பாதிப்பை தடுக்க, நேர்கல் தடுப்பு அமைக்க கோரி, மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சியில், மீனவர்கள் வசித்து வருகின்றனர். சுனாமி அலை தாக்குதலுக்குப் பின், இங்கு கடலரிப்பு ஏற்படத் துவங்கி, தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது, கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்காக, கடலில் பாறை கற்கள் குவிக்கப்பட்டதால், இப்பகுதியில் கடல் நீர் படிப்படியாக நிலப்பகுதியில் புகுந்து, கடற்கரை அழிந்துள்ளது. இதனால் மீன்பிடி படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைக்க இடமின்றி, பல ஆண்டுகளாக மீனவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடற்கரையிலிருந்து குறுகிய தொலைவிற்குள் வீடுகள் உள்ளதால், கடலரிப்பால் வீடுகளை தண்ணீர் சூழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடலரிப்பை தடுக்க, 25 கோடி ரூபாய் மதிப்பில் நேர்கல் தடுப்பு, வலை பின்னல் கூடம் ஆகியவற்றுடன், மீன் இறங்குதளம் அமைப்பதாக, 2023 சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பசுமை தீர்ப்பாய சிக்கல் காரணமாக முடங்கியுள்ளது. பேரூர் குடிநீர் ஆலை திட்ட ஒப்பந்த நிறுவனத்தினர், மீனவ பகுதியில் கற்கள் குவித்தும் பயனில்லை. இதையடுத்து, மீன்வளத் துறையினர் நேர்கல் தடுப்பை விரைந்து அமைக்க வலியுறுத்தி, இப்பகுதி மீனவர்கள் நேற்று, மீன்பிடி தொழிலை புறக்கணித்து, காலை 8:00 மணியளவில் உண்ணாவிரதம் துவக்கினர். இதையறிந்த மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜனார்த்தனன், இதுகுறித்து உயரதிகாரிகளிடம் விளக்கி, 10 நாட்களில் பணிகளை துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையேற்று, 10:00 மணியளவில் உண்ணாவிரதத்தை கைவிட்டு, மீனவர்கள் கலைந்து சென்றனர்.