உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள் சீரமைக்காமல் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்

ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் மரண பள்ளங்கள் சீரமைக்காமல் மாறி மாறி கைகாட்டும் அரசு துறைகள்

மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் ஆறு வழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. திருக்கச்சூர், தெள்ளிமேடு ‍ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்கள் அடிப்படை தேவைகளுக்காக, இச்சாலையை தினமும் பயன்படுத்தி சிங்கபெருமாள்கோவில், ஒரகடம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இச்சாலை வழியாக ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், ஒரகடம் -- சிங்கபெருமாள் கோவில் இடைப்பட்ட பகுதிகளில், பல்வேறு இடங்களில் சாலை பெயர்ந்து, பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல், விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த நெடுஞ்சாலையில் ஆப்பூர், வடக்குபட்டு கூட்டு சாலை, திருக்கச்சூர் உள்ளிட்ட பல இடங்களில் பள்ளங்கள் மற்றும் மணல் திட்டுகள் குவிந்து உள்ளன.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு, வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. மழைநீர் வெளியேறும் வழிகளில் குப்பை நிறைந்து, சாலையில் தண்ணீர் தேங்குகிறது.இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை தற்போது தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையிடம் வழங்கப்படவில்லை. எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே, பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விபத்தில் 6 பேர் உயிரிழப்புகடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில், ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் விபத்தில் சிக்கி மருத்துவ செலவுகள், வாகனங்கள் பழுது நீக்கும் செலவு என, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். - எம்.சுகுமார், சிங்கபெருமாள் கோவில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை