கடப்பாக்கத்தில் அரசு நிலம் மீட்பு
செய்யூர்:சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கடப்பாக்கத்தில், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறையினர் நேற்று மீட்டனர். அப்போது குடிசை வீட்டில் வசித்த பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிணார் பகுதியில் சர்வே எண் 83ல் 10 ஏக்கர் அரசு மேட்டுப் புறம்போக்கு நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளாக அங்கு குடிசை வீடு கட்டி, வாழ்ந்து வருகிறார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலு என்பவர் கடந்த 2024ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் குடிசைகள், மாட்டு தொழுவம் மற்றும் வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பாளருக்கு வருவாய் துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்ததால், நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றினர். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்து வந்த பைரவி என்பவர் தான் வசித்து வந்த குடிசைக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொல்ல முயற்சி செய்தார். போலீசார் பைரவியை மீட்டனர். குடிசையில் எரிந்த தீயை, அக்கம் பக்கத்தினர் அணைத்தனர்.