அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும்... வசூல் வேட்டை டோக்கன் முறையும் கண்துடைப்பானதால் அதிருப்தி
மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டைக்கு தலா 40 ரூபாய் என, விவசாயிகளிடம் தொடர்ந்து வசூல் வேட்டை நடந்து வருவதால், கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், 'டோக்கன்' முறையை பின்பற்றாமல்,'கமிஷன்' அளிப்பவர்களின் நெல்லை முதலில் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.மற்ற பகுதிகளில், நகரமயமாக்கல் காரணமாக, குறைவான அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்தில், 67,685 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2024- -- 25 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டது.விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,320 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 ரூபாய் என, மொத்தம் 2,450 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,302 ரூபாய், தமிழக அரசின் ஊக்கத்தொகை 130 ரூபாய் சேர்த்து, மொத்தம் 2,432 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.மேலும், நெல்லை துாற்றி கோணிப் பைகளில் 40 கிலோ எடையில் பிடித்து, லாரிகளில் ஏற்றுவது வரையிலான நிகழ்விற்கு தேவைப்படும் நெல் துாற்றும் இயந்திரம், கோணிப்பை, கூலி ஆட்களுக்கான ஊதியம் ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவினம் ஆகியவற்றை அரசு வழங்குகிறது.விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்க, எவ்விதமான கட்டணமும் அரசுக்கு வழங்க வேண்டியது இல்லை என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் மூட்டைக்கு, 40 ரூபாய் லஞ்சம் கேட்கப்படுவதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர். இந்த வசூல் வேட்டை இந்தாண்டும் தொடர்வதால், விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு, 42 கிலோ என, கூடுதலாக இரண்டு கிலோ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.ஒரு மூட்டைக்கு, 40 ரூபாய் கொடுத்தால் மட்டுமே, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கேள்வி கேட்கும் விவசாயிகளை, காத்திருக்க வைக்கின்றனர்.விவசாயிகளுக்கு,'டோக்கன்' அளித்தாலும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு லட்சம் ரூபாய்க்கு, 2,000 ஆயிரம் ரூபாய் வீதம் தனியாக, 'கமிஷன்' வாங்கிக் கொண்டு, டோக்கன் எண் அதிகம் இருந்தாலும், பின்னால் வரும் நபர்களின் நெல்லை முதலில் கொள்முதல் செய்கின்றனர்.புகார் தெரிவிப்போம் எனக் கூறினால், 'நாங்கள் தான் உங்களின் ரசீதுகளை மேல் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். வழியில் கிழித்து விட்டால், அலைந்து திரிந்து பணம் பெற வேண்டிய நிலை ஏற்படும். அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றால், உங்கள் கிராமத்தில் அடுத்த ஆண்டு நெல் கொள்முதல் நிலையம் வராது' என, நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.அதிகாரிகளுக்கு சாப்பாடு, குளிர்பானம், வாகனம் இல்லாத அதிகாரிகளை அவர்கள் கூறும் இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படுகின்றன.கடந்த சில நாட்களாக பல நெல் கொள்முதல் நிலையங்களில், நுாற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டும், குவியல்களாக கொட்டியும் வைக்கப்பட்டு உள்ளன.இந்த பருவத்தில் 1.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்., மாதத்தில் 15,000 டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் வில்லியம்பாக்கம், கருநிலம் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல், நேற்று முன்தினம் மழையில் நனைந்தது.இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள், அதிகாரிகளுக்கு தெரிந்தே நடைபெற்று வருகின்றன. கண்துடைப்புகளுக்காக மட்டுமே அதிகாரிகள் ஆய்வு நடத்தி, எந்த புகார்களும் நடைபெறவில்லை என, விவசாயிகளிடம் கடிதம் எழுதி வாங்கிக் கொள்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விஷ ஜந்துக்களால் பீதிநெல் கொள்முதல் நிலையங்கள் ஊருக்கு வெளியே உள்ள அரசு காலி இடத்தில் துவக்கப்படுகின்றன. இதனால், இரவு நேரங்களில் நெல்லை பாதுகாக்க காவலுக்கு இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இருள் சூழ்ந்த பகுதியில் விஷ ஜந்துக்களின் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. முறையாக 'டோக்கன்' முறையை பின்பற்றினால், விவசாயிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. டோக்கன் முறையை பின்பற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - விவசாயிகள்