கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் யு -டர்ன் இல்லாமல் தொடர் நெரிசல்
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி., சாலையில், 1.2 கி.மீ., துாரத்திற்கு,'யு -டர்ன்' இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு, பெருங்களத்துார் இடையிலான 28 கி.மீ., நீளமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில், கூடுவாஞ்சேரி நகராட்சி முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு 30 வார்டுகளில், 24,102 வீடுகளில், 96,408 பேர் வசிக்கின்றனர்.தவிர, சுற்றியுள்ள ஊராட்சிகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.கல்வி, தொழில், வேலை நிமித்தமாக இவர்களில் 60 சதவீதம் பேர், வெளி இடங்களுக்குச் செல்ல ஜி.எஸ்.டி., சாலையே பிரதான வழித்தடமாக உள்ளது.இதில், கூடுவாஞ்சேரி மின்வாரிய அலுவலகம் முதல் சீனிவாசபுரம் வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு இடையே எவ்வித 'யு- டர்ன்' திருப்பங்களும் இல்லை. இதனால், அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெடுந்துாரம் சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மின்வாரிய அலுவலகம் முதல் சீனிவாசபுரம் வரையிலான 1.2 கி.மீ., துாரத்தில், கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே தடுப்புகள் அமைத்து, இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லும்படி குறுகிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குறுகிய வழித்தடம் வாயிலாக ஒரு மணி நேரத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்கின்றன. அவ்வாறு கடக்கும் போது, ஜி.எஸ்.டி., சாலையில் வரக்கூடிய வாகனங்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அடிக்கடி விபத்து நடக்கிறது.எனவே, இங்கு 'யு- டர்ன்' மற்றும் சிக்னல் அமைத்தால், விபத்துகளை தவிர்ப்பதோடு, வாகன ஓட்டிகளின் நேர விரயமும் தவிர்க்கப்படும். தவிர, குறுகிய நேரத்திற்குள் 'ஆம்புலன்ஸ்' செல்லவும் வழி ஏற்படும்.'யு -டர்ன்' இல்லாததால் ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையின் எதிர்புறமாக விபத்தை ஏற்படுத்தும் விதமாக பயணிக்கும் நிலையும் உள்ளது.எனவே, கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே 'யு- டர்ன்' அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கூடுவாஞ்சேரி மருத்துவமனை அருகே 'யு- டர்ன்' அமைத்தால், அந்த இடத்தில் திரும்பிச் செல்ல காத்திருக்கும் வாகனங்களால், ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இந்த வழித்தடத்தில் உள்ள 90 சதவீத கடைகளுக்கு 'பார்க்கிங்' வசதி இல்லை. தவிர, மகேந்திரா சிட்டி முதல் மல்ரோசாபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவில்லை. அதுபோல், தைலாபுரம் முதல் அய்யஞ்சேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படவில்லை.இவ்விடங்களில் அணுகுசாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் பணிகள் நடக்கவில்லை. ஒட்டுமொத்த குளறுபடிக்கும் இதுவே காரணம்.எனவே, அணுகுசாலை அமைத்துவிட்டால், சிக்கல் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.