உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அம்பானி பேரக்குழந்தை பெறும் கல்வியை ஏழையும் பெறும் திட்டம் என்னிடம் உள்ளது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

அம்பானி பேரக்குழந்தை பெறும் கல்வியை ஏழையும் பெறும் திட்டம் என்னிடம் உள்ளது: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு

செய்யூர்:''அம்பானி பேரக் குழந்தைகள் பெறும் கல்வி தரத்தை, ஏழை மக்களின் குழந்தைகளும் பெறுவதற்கான திட்டம் என்னிடம் உள்ளது,'' என, சூணாம்பேடில் நேற்று நடந்த தெருமுனைக் கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார். செய்யூர் அடுத்த சூணாம்பேடில் பா.ம.க., தெருமுனைக் கூட்டம் நடந்தது. இதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது: மக்கள் பிரச்னைகளுக்காகவும், இட ஒதுக்கீட்டிற்காகவும் தமிழகத்தில் நான் செல்லாத சிறையே இல்லை. தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மது மற்றும் கஞ்சாவிற்கு அடியாகி வருகின்றனர். மதுவிற்கு அடிமையானால் கூட, மறுவாழ்வு மையம் வாயிலாக மீண்டு வரலாம். ஆனால், கஞ்சாவிற்கு அடிமையானால் மீளவே முடியாது. மது ஒழிப்பிற்காக, தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கூட்டம் நடத்தி உள்ளேன். அம்பானி பேரக்குழந்தைகள் பெறும் கல்வித் தரத்தை, ஏழை மக்களின் குழந்தைகளும் பெறுவதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் கவர்னர் என, எந்த பதவிக்கும் செல்ல மாட்டேன் என சத்தியம் செய்துள்ளேன். இங்கு, 100 வாக்காளர்களில் 51 பேர் பெண் வாக்காளர்கள்; 49 பேர் ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண்கள் மெஜாரிட்டி; ஆண்கள் மைனாரிட்டி. பெண்கள் மனது வைத்தால், ஆட்சி பொறுப்பை எங்களிடம் அளிக்கலாம். ஆனால், கடைசி நேரத்தில் சாராயம் விற்ற காசை கொடுத்து, உங்களை ஏமாற்றி ஓட்டுகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர். அதனால், இந்த முறை பெண்கள் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை