இடைக்கழிநாடு பேரூராட்சி தெருக்களில் பெயர்ப்பலகை அமைக்க எதிர்பார்ப்பு
செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில், பெயர்ப்பலகை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், 24 கிராமங்கள் உள்ளன.இந்த பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 35,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இடைக்கழிநாடு பகுதியில் மக்கள் நெருக்கமாக இல்லாமல், பரவலாக வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள தெருக்கள், பொது இடங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் பெயர்ப்பலகை இல்லாததால், பல்வேறு பகுதிகளில் இருந்து புதிதாக இப்பகுதிக்கு வருவோர் மற்றும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊராட்சி, நகராட்சிகளில் உள்ள தெருக்களில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டு இருப்பது போல, வெளியூர்களில் இருந்து வருவோர் எளிதாக முகவரிகளைக் கண்டறிய, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களிலும் பெயர்ப்பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் பெயர்ப்பலகை அமைக்க வேண்டியது அவசியம். இப்பகுதிகளுக்கு முக்கிய கடிதங்கள் கொண்டுவரும் அஞ்சலக ஊழியர்கள், கூரியர் ஊழியர்கள், தனியார் 'டெலிவரி' நிறுவன ஊழியர்கள் முகவரி தெரியாமல் தடுமாறுகின்றனர். மக்கள் நெருக்கமாக இல்லாததால், புதிதாக வருவோர் முகவரி கேட்க ஆளின்றி தடுமாறுகின்றனர். எனவே, பெயர்ப்பலகை கட்டாயம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.