| ADDED : பிப் 18, 2024 02:35 AM
திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில், 1951ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதிக்காக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 93.2 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு தளங்களுடன், ஆறு வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பணிகள் துவங்க அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தற்போது, அனைத்து பணிகள் முடிந்து, இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.தொடர்ந்து, கேளம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, கட்டடத்தை திறந்து வைத்து வகுப்பறைகளை பார்வையிட்டார். பள்ளி மாணவ -- மாணவியருக்கு இனிப்பு, நோட்டு புத்தகம் வழங்கினார். விழாவில், தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சேகர், ஊராட்சி தலைவர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.