உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புறநகரில் பைக் திருட்டு அதிகரிப்பு போலீஸ் அலட்சியத்தால் அதிருப்தி

புறநகரில் பைக் திருட்டு அதிகரிப்பு போலீஸ் அலட்சியத்தால் அதிருப்தி

மறைமலைநகர்:செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான வண்டலுார், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில், நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் சிப்காட், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மறைமலைநகரைச் சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் வந்து, இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்து விட்டுச் செல்கின்றனர்.மேலும், தென்மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கானோரும், இங்கு தங்கி பணிபுரிகின்றனர்.இவர்கள், தாங்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் பணிபுரியும் இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லும் போது, அவை திருடப்படுவது தொடர்கதையாக உள்ளது.அதேபோல, செங்கல்பட்டு ரயில் நிலைய பார்க்கிங், அரசு மருத்துவமனை பார்க்கிங் பகுதிகளில் இருந்தும், அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுகின்றன.திருடப்படும் இருசக்கர வாகனங்கள் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகரைச் சுற்றியுள்ள காப்புக் காடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு, அதில் உள்ள பாகங்களை பிரித்து விற்பனை செய்யப்படுவதாக, மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது.இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உட்பட பல காவல் நிலையங்களிலும், புகாரைப் பெறுவதில்லை எனக் கூறப்படுகிறது. நீண்ட நாள் காவல் நிலையத்திற்கு அலைந்த பின்னரே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தினால், வாகனம் பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில் ரயில்வே பார்க்கிங், பேருந்து நிறுத்தம், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து, வெளியூரைச் சேர்ந்த கும்பல் திருடி வருகிறது. கடந்த வாரம் செங்கல்பட்டு நகர பகுதியில், குப்பை சேகரிப்பது போல நடித்து 'பைக்'குகளை திருடி வந்த கும்பல் சிக்கியது.குரோம்பேட்டை பகுதியில் இருந்து செங்கல்பட்டிற்கு மின்சார ரயிலில் வந்து, ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை திருடுவதை வழக்கமாக வைத்திருந்த வாலிபர், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பணிக்கு செல்லும் அவசரத்தில், வாகனங்களை பாதுகாப்பு இல்லாத பொது இடங்களில் நிறுத்திவிட்டுச் செல்வதும், திருட்டு சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை