உபரிநீர் கால்வாய் பாலத்தில் தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, ஒரத்தி ஊராட்சி உள்ளது. அச்சிறுபாக்கத்தில் இருந்து தொழுப்பேடு வழியாக ஒரத்தி, வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.அதில், புறங்கால் ஊராட்சியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து கலங்கல் வழியாக உபரி நீர் செல்லும் கால்வாய், ஒரத்தி - அன்னங்கால் பகுதி பேருந்து பயணியர் நிழற்குடை அருகே, நெடுஞ்சாலையை கடந்து செல்கிறது. அதில், கால்வாய் மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மீது, இரும்பு தடுப்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் கான்கிரீட் கட்டைகள் அமைக்கப்படாமல், திறந்த நிலையில் உள்ளது.இந்த சாலையை, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சாலை வளைவில், தடுப்புகள் இன்றி திறந்தநிலையில் பாலம் உள்ளதால், எதிரே வாகனங்கள் வரும்போது, ஒதுங்கி நிற்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலத்தின் ஓரங்களில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.