மேலும் செய்திகள்
ஊஞ்சல் உத்சவம்
2 hour(s) ago
வட மாநில வாலிபரை தாக்கி பணம் பறித்தவர் கைது
2 hour(s) ago
இன்று இனிதாக (நாள்/31/12/2025/புதன்)
2 hour(s) ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை அருகே செயல்படும் மூன்று டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென, முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவுவிட்டன. அதன் பின், சாலையில் ஓரம் இருந்த சில டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. செங்கல்பட்டு நகரில் ஜி.எஸ்.டி., சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு - புலிப்பாக்கம் சாலையில், ரயில்வே மேம்பாலம் பகுதியில், ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி., சாலை அருகே இந்த மூன்று கடைகளும் செயல்பட்டு வருவதால், கடைக்கு வரும் 'குடிமகன்'கள், சாலையிலேயே நின்று மதுபானம் அருந்துகின்றனர். பின், போதை தலைக்கு ஏறியதும், சாலையில் நடந்து செல்லும் பெண்களை கிண்டல் செய்து, பாலியல் தொந்தரவு செய்கின்றனர். இதனால், அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இது தொடர்பாக, செங்கல்பட்டு நகர போலீசில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ராட்டிணங்கிணறு வரை தினமும் பிற்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரையும், மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையும், சாலையில் குடிமகன்கள் கடக்கும் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்த மூன்று டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய, அப்போதைய கலெக்டர் ராகுல்நாத், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. செங்கல்பட்டு, அண்ணா நகர் பகுதியில், இரண்டு ரேஷன் கடைகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள் பொருட்கள் வாங்க செல்கின்றனர். இந்நிலையில், அண்ணா நகர் நுழைவாயில் பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு வரும் குடிமகன்கள் மதுபானம் வாங்கி, ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதி மற்றும் சாலையை குடிமையமாக மாற்றி, மதுபானம் குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும், சாலையில் அரை நிர்வாணமாக விழுந்து கிடக்கின்றனர். இதனால், சாலையில் நடந்து செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதுமட்டுமின்றி, குடிமகன்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அதனால், இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, நகரவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி, செங்கல்பட்டில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், அண்ணா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, நகரவாசிகள் மனு அளித்தனர். ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கலெக்டர் சினேகா ஆகியோரிடமும், கடந்த நவ., மாதம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மூன்று டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago