செய்யூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, மழையில் நணைந்து முளைத்த நெல்லை புதிய மூட்டைகளில் நிரப்பி தரமான நெல்லாக சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகையால் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து வரும் நெல் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1.67 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற பகுதியில், குறைவாக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சொர்ணவாரி, பொன்னி, பி.பி.டி., குண்டு, என்.எல்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு ரக நெல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் முடிந்துள்ளன. இந்நிலையில் சொர்ணவாரி பருவத்திற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழத்தினர் சார்பாக 40க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டன. அரசின் விதிகளின்படி, நெல் மணிகளின் ஈரப்பதம் கணக்கீடு செய்யப்பட்டு 17 சதவீதத்தை மீறாமல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு மூட்டைகளாக கட்டப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் முறையான பாதுகாப்பு இன்றி மழையில் நணைந்து சேதமடைந்தன. குறிப்பாக செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட நீலமங்கலம், நாங்களத்துார் நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் நணைந்து முளைத்து வீணாகின. இதையடுத்து மழையில் நணைந்து முளைத்து வீணாகிய நெல்லை புதிய மூட்டைகளுக்கு மாற்றி, தரமான நெல் போல சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப் படுகிறது. இதனால் தரமான நெல்லும் சேதமடைந்து அரசுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். ஆகையால் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் நெல்மூட்டை மாதிரிகளின் ஈரப்பதத்தை பரிசோதனை செய்து, முளைத்த நெல் மூட்டைகள் அனுப்பிய நெல் கொள்முதல் நிலையங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.