நடக்கவே லாயக்கற்ற நிலையில் உட்புற சாலைகள்படுமோசம்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் பரிதாபம்
காட்டாங்கொளத்தூர்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் உட்புற சாலைகள் மேடு பள்ளங்களுடன், குண்டும் குழியுமாகி, படுமோசமான நிலையில் உள்ளன. நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலைகளை, மாவட்ட நிர்வாகம், ஒன்றிய நிர்வாகங்கள் ஆய்வு செய்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தின் 37வது மாவட்டமாக 2019ல் உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்கள் உள்ளன. இதில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 193.90 ச.கி.மீ., பரப்பில் உள்ளது.இந்த ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் அடங்கி உள்ளன.கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஒன்றியத்தில் வசிப்பதாக தரவுகள் கூறுகின்றன. அதன் பின், 2021ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. நகரமயமாக்கலின் விளைவால், தற்போது காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.இங்குள்ள, 39 ஊராட்சிகளில், 6,000க்கும் மேற்பட்ட தெருக்களில், 18,000க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், 70 சதவீதம் சாலைகள் நடக்கவே லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளன. இதனால், பொதுமக்கள் பல வகையில் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட வேகமாக வர வழியின்றி, தவித்து வருகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:சென்னை மாநகரின் புறநகர் பகுதியாக, காட்டாங்கொளத்துார் ஒன்றியம் உள்ளது. பேருந்து வசதி, புறநகர் மின்சார ரயில் சேவை, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் வரவு, ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் என, சென்னை மாநகரின் அனைத்து தடங்களையும் காட்டாங்கொளத்துார் சுமந்து நிற்கிறது.கிராமங்களை உள்ளடக்கி, வேளாண் தொழிலை மட்டுமே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டிருந்த இந்த ஒன்றியம், நகரமயமாக்கலால் ஈர்க்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது.தற்போது, தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேர், இந்த ஒன்றியத்தில் புதிதாக வீடு கட்டி, குடியேறி வருகின்றனர்.தவிர, தனியார் கட்டுமான நிறுவனங்களும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகின்றன. ஆண்டுதோறும், புதிதாக பல தெருக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.ஆனால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, இங்கு அடிப்படை வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.முக்கியமாக, ஊராட்சிகளில் உள்ள உட்புற சாலைகள் குண்டும் குழியுமாக, மேடு பள்ளங்களுடன் படுமோசமாக உள்ளன.பல ஊராட்சிகளில், 20 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத சாலைகளும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.குண்டும் குழியுமான சாலைகளால், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பள்ளிக்கூட வாகனங்கள், குறித்த நேரத்தில் வர முடியவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள், தினமும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் நடக்கவே முடியாத அளவிற்கு சாலைகள் உள்ளதால் குழந்தைகள், முதியோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.தவிர, மழைக்காலங்களில், சாலைகளில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.சாலையை புனரமைத்து தரும்படி ஊராட்சி நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள், ஒன்றிய நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தால், உரிய பதில் இல்லை.பல தெருக்களில் சாலை அமைப்பதற்கு பதிலாக, ஜல்லி கற்களை மட்டுமே நிரப்பிவிட்டுச் செல்கின்றனர்.அதே வேளையில், பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்களின் குடியிருப்புகள், முக்கிய நபர்களின் வீடுகள் அமைந்துள்ள தெருக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அங்கு மட்டும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில், அனைவரும் சமம்.எனவே, ஊராட்சிகளில் உள்ள உட்புற சாலைகளை புனரமைக்க, காட்டாங்கொளத்துார் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.போதிய நிதி இல்லை
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் இருந்து சாலை வசதி வேண்டி, தினமும் கோரிக்கை மனுக்கள் வருகின்றன. கிராம சபைக் கூட்டம், மனுநீதி நாள் ஆகிய நிகழ்ச்சிகளிலும், சாலை வசதி வேண்டியே நிறைய மனுக்கள் வருகின்றன.தற்போதைய நிலையில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்களில் புதிய சாலை அமைக்க, மனுக்கள் வந்துள்ளன. ஆனால், பணிகளை உடனே முன்னெடுக்க, போதிய நிதி இல்லை. மத்திய, மாநில அரசுகள் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.- காட்டாங்கொளத்துார் ஒன்றிய அதிகாரிகள்