மாமல்லபுரம், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை இயங்கி வருகிறது. கடந்த நுாற்றாண்டில் வாழ்ந்த, நெம்மேலி பகுதியைச் சேர்ந்த ஆளவந்தார், வைணவ சமய ஈடுபாடு கொண்டிருந்தார். அவருக்கு சொந்தமான கடலோர நிலத்தை நிர்வகித்து, ஆன்மிக சேவையாற்ற கருதி, அவரது பெயரில் அறக்கட்டளை நிறுவினார். தற்போது அறக்கட்டளையை, ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. அவரது உயில் பதிவின்படி, அறக்கட்டளை சொத்து வருவாயில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், நித்ய கல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களில் உற்சவங்கள் நடத்தவும், நாலாயிர திவ்விய பிரபந்தம் பயிற்றுவிக்கவும் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, நெம்மேலியில் உள்ள அவரது திருவரசு கோவில் வளாகத்தில், அதற்கான பாடசாலைக்கு, 96 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டது. கடந்தாண்டே பயிற்சியை துவக்கக் கருதி, நான்கு ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி, மாத ஊக்கத்தொகை 3,000 ரூபாய் என நிர்ணயித்து, விண்ணப்பம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கு போதிய வரவேற்பு இல்லாததால் தாமதமானது. தற்போது பயிற்சிக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக குறைத்து, மாத ஊக்கத்தொகையை, 4,000 ரூபாயாக உயர்த்தி, அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:ஹிந்து மதத்தைச் சேர்ந்த வைணவ சமய கோட்பாடுகளை கடைப்பிடிக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 2024 பிப்., 1ம் தேதி 14 - 25 வயதிற்கு உட்பட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. உணவு, சீருடை, தங்குமிடம் ஆகியவையும் இலவசம். மாத ஊக்கத்தொகையாக, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.மார்ச் 20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மாமல்லபுரம், அறக்கட்டளை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, வயது, மதம், கல்வி ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது.