உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் இடையூறாக இரும்பு கம்பிகள்

ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் இடையூறாக இரும்பு கம்பிகள்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில், ரேஷன் கடைக்கும் செல்லும் வழியில் இடையூறாக வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பெருங்களத்துார் முதல்‍- செட்டிபுண்ணியம் வரை, எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில், பேருந்து நிறுத்தங்கள் அருகில் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே, மேற்கண்ட பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் சார்பில் சிங்கப்பெருமாள் கோவிலில் அனுமந்தபுரம் சாலை சந்திப்பு அருகே, சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க தேவையான இரும்பு கம்பிகள், ஜி.எஸ்.டி., சாலையோரம் பாதசாரிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் செல்லும் வழியில் இடையூறாக இந்த இரும்பு கம்பிகளை வைத்துள்ளதால், ரேஷன் கடைக்குச் செல்வோர், கடந்த ஒரு மாதமாக சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொண்டு வரும் போது, இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே, இடையூறாக உள்ள இந்த இரும்பு கம்பிகளை வேறிடத்திற்கு மாற்றி வைக்கவும், நடைமேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை