| ADDED : நவ 17, 2025 07:51 AM
சித்தாமூர்: சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மானிய வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் திறந்தவெளியில் வைக்கப்பட்டு உள்ளதால், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், லத்துார் ஒன்றியத்தில், 43 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறை மூலமாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசு நிதியில் கட்டப்படும் வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த இரும்பு கம்பிகளை பாதுகாப்பாக வைக்க கிடங்கு இல்லாததால், திறந்தவெளியில் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுஉள்ளன. இதனால், வெயில் மற்றும் மழையில் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. மேலும், இந்த வளாகத்தில் எந்தவித பாதுகாப்பு வசதியும் இல்லாததால், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கம்பிகளை திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இரும்பு கம்பிகளை பாதுகாக்க கிடங்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.